திருவாரூரில் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான சுமார் 2000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்னும் நான்கைந்து தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய சுமார் 2000 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையில் முற்றிலும் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடி இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை சுமார் 34,000 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள வயல்களிலும் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை, சம்பா சாகுபடி தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் குறுவை அறுவடை செய்து வரும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் இளவங்கர்குடி, கட்டக்குடி, வடுவூர் வடபாதி, திட்டாணிமுட்டம், கண்கொடுதவனிதம், முசிறியம், நாலிலொன்று, கருப்பூர், அலிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2000 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் இன்னும் நான்கு ஐந்து தினங்களில் அறுவடை தருணத்தை எட்டியிருந்த நிலையில், நேற்று முன்தினம் தொடங்கி பெய்த மழை காரணமாக முற்றிலும் மழை நீரில் மூழ்கிவிட்டது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் சிலர் நம்மிடம் பேசியபோது, கடந்த இரண்டு மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் அனைத்தும் சாய்ந்து மழை நீரில் மூழ்கி விட்டன. தற்போது வயல்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால் தண்ணீரை வடிய வைப்பதற்கான சூழல் இல்லாத நிலை உள்ளது காரணம் அதிலுள்ள வாய்க்கால்களிலும் தண்ணீர் முழுமையாக செல்கிறது. இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்தாலும் ஈரப்பதம் அடைந்த நெல்லை எப்படி உலர்த்துவது என தெரியவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக குறுவை சாகுபடி முற்றிலும் செய்யாத நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடப்பது பேரிடியாய் உள்ளது. ஓரிரு தினங்களில் தண்ணீரை வடிய வைக்கவில்லை என்றால் பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலை உருவாகிவிடும் நாங்கள் போட்ட முதல் கூட எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் எனவே வேளாண் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்