குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் சோதனை நடைபெறுவது பாஜக அரசியல் லாபம் காண முயல்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் தவறில்லை. சோதனை நடத்தி பணமோ, சொத்தோ இருந்தால் கைப்பற்றட்டும். ஆனால் சோதனையை ஒரு குடும்பத்தினர் மீது மட்டுமே நடத்தாமல், பரவலாக நடத்த வேண்டும். அதிமுகவில் இடம் பெற்றிருந்த அனைவரது மீதும் சோதனை நடத்தப்பட்டிருந்தால், அது பொதுவானதாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் மீது மட்டுமே சோதனை நடத்துவதால், அரசியல் லாபத்திற்காக பாஜக அரசு செயல்படுகிறது என்ற சந்தேகத்தை மக்களிடையே எழுப்புகிறது” என்று கூறினார்.