விக்கிரவாண்டி தொகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பரப்புரை மேற்கொண்ட சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்றும், ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என்றும் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, அமைதியாக இருக்கின்ற சூழலை மாற்றி வன்முறையை தூண்டுவதாக சீமான் மீது குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்திருந்தனர். அதன்படி, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 153, 504 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சீமானின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறும்போது "இந்திய அமைதிப் படைக்கு எதிரான சீமானின் கோபம் நியாயமானதுதான் என்றாலும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை எச்சரிக்கையோடு தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.