முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது வழங்கியது தமக்கு வேதனை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு இந்தாண்டிற்கான தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வளர்மதி நேற்று பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய வளர்மதி, கடவுள் ஒழிப்புக் கொள்கை மட்டும்தான் பெரியாரின் கொள்கையா..? பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கைதான் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது வழங்கியது தமக்கு வேதனை அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ வளர்மதிக்கு பெரியார் விருதை வழங்கியது, பெரியாரின் நன்மதிப்பிற்கு ஊறு விளைப்பதாக இருக்கிறது. இது வேதனைக்குரியது. எதுவெல்லாம் பெரியாரால் மூட நம்பிக்கை என சொல்லப்பட்டவையோ, அத்தனை நம்பிக்கைகளையும் வளர்மதி கொண்டவர். எந்த அடிப்படையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது என தெரியவில்லை. முதலமைச்சர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும் பெரியார் சிந்தனை உள்ளவர்களின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
முன்னதாக, கோயிலுக்கு வளர்மதி தீச்சட்டி எடுக்கும் போட்டோவை பதிவிட்டு இவருக்கெல்லாம் பெரியார் விருது..? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.