தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் படி அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தங்க தமிழ்ச்செல்வனின் வங்கி இருப்பு, தங்க நகைகள், முதலீடு, வாகனங்கள் வாங்கியது உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு 65,19,435 ரூபாயாக உள்ளது. அவரது மனைவி பெயரில் 33,76,978 ரூபாயும், மகன் பெயரில் 16,64,563 ரூபாயும், மகள் பெயரில் 9,18,580 ரூபாய் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல தங்க தமிழ்ச்செல்வனுக்கு அசையா சொத்து மதிப்பு 39,60,030 ரூபாயாகவும் அவரது மனைவி பெயரில் 35,25,000 ரூபாயாகவும் உள்ளது. அதோடு, தங்க தமிழ்ச்செல்வனுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பூர்வீகச் சொத்து உள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் 64,25,543 ரூபாயும், அவரது மனைவிக்கு 26,43,179 ரூபாயும் கடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தேனி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவோடு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அசையும் சொத்தின் மதிப்பு 72,86,388 ரூபாயாகவும், தனது மனைவிக்கு 43,17,393, ரூபாய், மகன் பெயரில் 8,36,789 ரூபாயும், 9,20,239 ரூபாயாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
2019ம் ஆண்டில் தங்க தமிழ்செல்வனின் அசையாக சொத்தின் மதிப்பு 62,60,030 ரூபாயாகவும், 1,95,20,675 ரூபாயாகவும் உள்ளது. 2 லட்சம் மதிப்புள்ள அதே பூர்வீக சொத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வங்கி கடன் தங்க தமிழ்ச்செல்வனுக்கு 79,34,188 ரூபாயாகவும், தனது மனைவி பெயரில் 26,43,179 ரூபாயாகவும் உள்ளது.
அந்த வகையில் 2019ம் ஆண்டோடு ஒப்பிடும்போது தங்க தமிழ்ச்செல்வனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அசையும் சொத்தின் பதிப்பு 7,66,953 ரூபாய் குறைந்துள்ளது. அவரது மனைவி பெயரிலான அசையும் சொத்து 9,40,415 ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்க தமிழ்செல்வனின் அசையா சொத்துக்களின் மதிப்பு 23.00,000 ரூபாயாக குறைந்துள்ளது. அவரது மனைவி பெயரில் இருந்த அசையா சொத்து 1,59,95,675 ரூபாய் குறைந்துள்ளது.
அதே நேரம் தங்க தமிழ்ச்செல்வன் பெயரில் உள்ள வங்கி கடன்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 15,08,575 ரூபாயாகவும், தனது மனைவி பெயரில் உள்ள கடன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறாமல் அதே 26,43,179 ரூபாய் வங்கிக் கடன் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு குறைந்துள்ளது தங்க தமிழ்செல்வனின் பிரமாண பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது.