தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
தேனியில் தமிழக அரசு சார்பில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த விழாவின் போது ரூ.19 கோடி மதிப்பிலான 25 பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். மேலும் 35 பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய அவர், ஆட்சியை கலைக்கும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது என்றார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த திட்டங்களை செயல்படுத்தி தற்போதுள்ள அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி சென்று விடக்கூடாது என்பதற்காகவே இரு அணிகள் இணைந்தன என்றார். இந்த விழாவில் 99 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இதுவரை 21 மாவட்டங்களில் நடைபெற்ற நிலையில், 22வது மாவட்டமாக திண்டுக்கல்லில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதற்காக திண்டுக்கல் அங்குவிலாஸ் மைதானத்தில் நடைபெற்ற கால்கோள் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.