மனிதர்களுக்கு செய்வது போல், இறந்த குரங்கிற்கு உரியமுறையில் ஈமச்சடங்கு செய்து இறுதிஅஞ்சலி செலுத்திய இளைஞர்கள் அதனை நல்லடக்கம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த இளையநல்லூர் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிலையத்தில் உள்ள ஆலமரத்தில் குரங்குகள் அதிகஅளவில் வாழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த ஆலமரத்தில் வசித்து வந்த குரங்கு ஒன்று சாலையில் சென்ற வாகனத்தில் மோதி பலத்த காயம் அடைந்துள்ளது.
இதனை மீட்ட அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த குரங்கானது இன்று திடீரென இறந்துவிட்டது. இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மனிதனுக்கு செய்வது போல் ஈமச்சடங்கு செய்து. மேளம் அடித்து ஒப்பாரி வைத்து அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகிலேயே அதனை உரிய மரியாதையுடனும், பக்தியுடனும் நல்லடக்கம் செய்தனர்.