வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தில் பாரம்பரிய உணவான பனங்கிழங்கிலிருந்து உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத இனிப்பு பலகாரங்களை தயாரிக்கும் முயற்சிகளில் ஆசிரியர் ஈடுபட்டுள்ளார்.
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகளை மக்கள் நாடிச் செல்லும் நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தை சேர்ந்த தமிழாசிரியர் கார்த்திகேயன் என்பவர், ஆசிரியர் பணியுடன் தமிழர்களின் பாரம்பரிய உணவான பனங்கிழங்கிலிருந்து உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத இனிப்பு பலகாரங்களை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
பனங்கிழங்கிலிருந்து பர்பி, அல்வா, சாக்லெட், பால்கோவா, சோன்பப்டி, போன்ற இனிப்புகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயார் செய்து மக்களுக்கு ஆசிரியர் கார்த்திகேயன் வழங்கி வருகிறார். இவரின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களுக்கு பனங்கிழங்கிலிருந்து பர்பி, அல்வா போன்ற இனிப்புகளை தயாரித்து கூரியர் மூலம் அனுப்பி வருகிறார். அரசு கடனுதவி செய்தால் பெரும் அளவில் இனிப்புகளை தயார் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்வேன் என்கிறார் கார்த்திகேயன்.
நன்றாக வேக வைத்த பனங்கிழங்கை உலர்த்தி மாவாக அரைத்து அதனுடன் முந்திரி பருப்பு ஏலக்காய் ஆகியவற்றை கலந்து வெல்லப்பாகு சேர்த்து சுவை மிகுந்த பனங்கிழங்கு பர்பி, பனங்கிழங்கு அல்வா தயார் செய்யப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக பனங்கிழங்கிலிருந்து சோன்பப்டி, பால்கோவா, சாக்லெட் போன்ற இனிப்புகளை தயாரிக்க உள்ளார்.
பர்பி ஒரு கிலோ ரூ 450க்கும் அல்வா ஒரு கிலோ ரூ 550க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பனங்கிழங்கை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி வருகிறார். இதனால் ஒரு ரூபாயக்கு விற்கும் ஒரு கிழங்கு ரூ 3-க்கு விற்பனையாகும் என்பதால் நல்ல வருவாயும் கிடைக்கும். இதனால் மக்கள் பனை மரங்களை அழிக்கும் எண்ணத்திலிருந்து மாறுவார்கள் என பனைமரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வரும் தமிழாசிரியர் கார்த்திகேயன், பனங்கிழங்கிலிருந்து 25 வகையான உணவுப் பொருட்களை தயார் செய்து கின்னஸ் சாதனை படைப்பது தன்னுடைய லட்சியம் என்றார்.