தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எம்எல்ஏ-க்களின் மாதச் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடி ரூபாயிலிருந்து இருந்து இரண்டரை கோடி ரூபாயாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால், ஊதியம் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.
12 ஆயிரம் ரூபாயாக இருந்த எம்எல்ஏக்களின் ஓய்வூதியம், 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எம்எல்ஏ-க்களின் சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் பழனிசாமி அறிவித்தார். இதனால் எம்எல்ஏ-க்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 2008-ஆம் ஆண்டு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், 2009-ல் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 2011-ல் 50 ஆயிரத்திலிருந்து 55 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.