சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி முதியனூரில் திருமணத்தை மீறிய உறவை கண்டித்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி, முதியனூரைச் சேர்ந்தவர் சிவன்னா (30), இவரது மனைவி குமாரி (27). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு எதிரில் மைக்கேல், ராணி தம்பதியின் மகன் தினேஷ் வசித்து வருகிறார். தினேஷ்க்கு திருணமாகி குழந்தைகள் உள்ளனர்.
தினேஷ்க்கும் சிவன்னா மனைவி குமாரிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து சென்ற குமாரி, தாளவாடியில் வாடகை வீட்டில் தினேஷ் உடன் வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்துமாறு மனைவி குமாரியை சந்தித்து கணவர் சிவன்னா கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தினேஷை விட்டு கணவர் சிவன்னாவுடன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இதையடுத்து சிவன்னா வீட்டுக்கு வந்து தினேஷ் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிடுவதாக குமாரியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குமாரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த குமாரியின் உறவினர்கள் தினேஷ் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து குமாரியை தற்கொலை செய்ய தூண்டியதாக தினேஷ் மீதும் அவர்களுக்கு துணையாக இருந்த தினேஷின் தந்தை மைக்கேல், தாயார் ராணியை கைது செய்யக்கோரி குமாரியின் சடலத்தை தினேஷ் வீட்டின் முன் வைத்து 8 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தினேஷ் தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி சுப்பையா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். பின்பு தினேஷின் பெற்றோரை போலீசார் கைது செய்ததையடுத்து குமாரியின் உறவினர்கள் 8 மணி நேரமாக நடந்திய போராட்டத்தை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து குமாரியின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.