வீட்டில் புகுந்த திருடனைப் பிடிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த நபரின் இடுப்பு எலும்பு முறிந்துள்ளச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை வெங்கடாச்சலம் தெருவில் வசிப்பவர் ராஜா(37). பிளம்பர் வேலை செய்து வரும் இவர், இரண்டு தளங்கள் கொண்ட வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் நேற்று வீட்டின் கடைசி மாடியில் இருக்கும் ஒரு பகுதியில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது வீட்டின் பீரோவை யாரோ திறப்பதுபோல் சத்தம் கேட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெங்கடாச்சலம் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது திருடர் ஒருவர் பீரோவை திறந்து பொருட்களை எடுப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ர்சியடைந்த ராஜா அவருடன் கட்டிப்புரண்டு சண்டைப் போட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ராஜாவிடம் இருந்து தப்பிய திருடர் 2-வது மாடியில் இருந்து குதித்து தப்பிச் சென்றார். அவரைப் பிடிக்கும் வேகத்தில் ராஜாவும் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் ராஜாவின் இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் திருடர் தப்பி ஓடி விட்டார்.
தகவலறிந்த குமரன் நகர் காவல்துறையினர் ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக தற்போது ராஜா, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சியை ஆராய்ச்சி செய்தனர். அதில் திருடன் தப்பிச் செல்லும் காட்சிகளும், கீழே விழுந்த ராஜாவை பக்கத்து வீட்டில் வசிப்பவர் காப்பாற்ற செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளை வைத்து காவலர்கள் திருடனை அடையாளம் காண முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.