கோவையை பற்றித் தெரியாதவருக்கு ஓட்டுப்போட மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வீதிகளில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய வானதி சீனிவாசன், “மத்தியில் நேர்மையான, திறமையான ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய போகின்றது. இந்த தொகுதியில் ஓருபுறம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
மற்றொரு புறம் இதுவரை கோவையை பற்றி பேசாத, கோவை மக்களுக்காக களமிறங்காத, கோவை மக்களை தெரியாத, கோவையின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை தெரியாத நபர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
வாக்கிங் போகின்றார், ஜாக்கிங் போகின்றார், கம்பு சுத்துகின்றார் ஸ்டார் ஓட்டலில் தங்கிக்கொண்டு ஆட்டோவில் போகின்றார். கோவை தெற்கு தொகுதி மக்கள் ஏமாளிகளல்ல. கடந்த தேர்தலில் தோற்ற போதும் இந்த தொகுதி மக்களுக்காக தொடர்ந்து போராடி வந்திருக்கின்றேன்.
உங்களுக்கு உழைக்கின்ற மண்ணின் மகளான எனக்கு வாக்களிக்க வேண்டும். எந்த திட்டமானலும் மத்திய அரசிடம் பேசுகின்ற சக்தி, டெல்லியில் காரியம் செய்கின்ற சக்தி, இந்த தொகுதி வேட்பாளரான எனக்கு உண்டு” என அவர் பேசினார்.