திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என ஜனவரி 4 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் இவர் பதவி வகித்து வந்த திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவாருர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என ஜனவரி 4 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி 2 முதல் 3 ஆம் தேதி வரை வழங்கலாம் எனவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.