ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார் என கட்சியை சேர்ந்தவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவி ஆகியவற்றிலிருந்து பைலட் நீக்கப்பட்டு இருந்தாலும், அவர் கட்சியில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை. ஆகவே அடுத்தக்கட்டமாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி விடுமா என காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தலைமையின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
பைலட் பதவியிலிருந்தது நீக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை அவரின் ஆதரவாளர்கள் தாமாகவே கட்சியை விட்டு வெளியேறலாம் எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். அப்படி காங்கிரஸ் கட்சியிலிருந்து பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விலகினால் அவர்கள் பாரதிய ஜனதா பக்கம் செல்வார்களா அல்லது ராஜஸ்தான் மாநிலத்தில் தனிக்கட்சி அமைக்க முற்படுவார்களா என்றும் பேச்சு நிலவுகிறது.
பைலட் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த இரண்டு ராஜஸ்தான் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் தலைமை, பைலட்டுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை முதல்வர் அசோக் கெலாட் பக்கம் இழுக்க தற்போது திரை மறைவிற்குப்பின் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். சச்சின் பைலட் ஆதரவாக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கினால் அவர்கள் பாரதிய ஜனதா பக்கம் சாய வாய்ப்பு இருக்கிறது. அல்லது சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கினால் அந்த கட்சியில் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் இணைந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆகவேதான் கட்சித் தலைமை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இப்போது எடுக்காமல் அவர்களை சச்சின் பைலட் பக்கம் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
பல காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படை வருத்தம்
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வெடித்திருக்கும் கோஷ்டிப் பூசல் மற்றும் சச்சின் பைலட் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்படுவது ஆகிய விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை சச்சின் பைலட்க்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையிலும் பல காங்கிரஸ் தலைவர்கள் இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருப்பது கட்சிக்குள் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு விலகுவது வருந்தத்தக்கது என கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் கருதுகிறார்கள். இதற்கு முன்பாக ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, அஸ்ஸாம் மாநிலத்தில் ஹேமந்த பிஸ்வால் சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அஜய்குமார் போன்ற தலைவர்கள் சமீபத்திலும் அதற்கு முன்பு மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி மற்றும் தமிழகத்தில் ஜிகே வாசன் போன்ற மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியது இது தொடர்பாக நினைவுகூரப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலே சரத்பவார் கட்சியை விட்டு விலகிய பிறகு காங்கிரஸ் வலுவிழந்து இருப்பதும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சச்சின் பைலட் விவகாரத்தை தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என காங்கிரஸ் கட்சி தலைவர்களும் அத்துடன் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
அசோக் கெலாட் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வந்தாலும், இதுவரை ராஜஸ்தான் முதல்வர் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை பத்திரமாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைத்து தன் பக்கம் பலம் இருப்பதை உறுதிப்படுத்தி வருகிறார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதன்கிழமையன்று சச்சின் பைலட் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை இழந்து விட்டார் என்றும் சட்டசபையில் பலப்பரீட்சை நடந்தால் அரசு கவிழ்ந்துவிடும் எனவும் பைலட் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே அடுத்து வரும் நாட்களில் ராஜஸ்தான் அரசியலில் மேலும் சில பரபரப்பான நிகழ்வுகள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.