ஏப்ரல் 18ம் தேதியையொட்டி புனித வாரம் என்பதால், தேர்தல் தேதியை மாற்றக்கோரிய கிறிஸ்தவ அமைப்புகளின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் புனிதமாக கொண்டாடும் பெரிய வியாழன் பண்டிகை தினமான ஏப்ரல் 18ம் தேதி நடத்த உள்ள தேர்தலை மாற்றி வைக்க கோரி, கிறிஸ்தவ மக்கள் களம் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில் கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுவதால், இந்த பள்ளிகளுடன் இணைந்து இருக்கும் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தலை மாற்றி வைக்க வேண்டும் என கிறிஸ்தவ மக்கள் களம் மனுவில் குறிப்பிட்டிருந்தது. மேலும் தேர்தல் பணி காரணமாக, அரசுப் பணியிலும், ஆசிரியர் பணியிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள், இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் தொடர்ந்த வழக்கில் விரிவான வாதங்களுக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என கூறி இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.