நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு காலை தொடங்கியது. இத்தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், சிக்கிம் மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒடிஸா சட்டப் பேரவையிலுள்ள சில தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.ஆந்திரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒடிஸா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து, மொத்தமுள்ள 147 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகள், நக்ஸலைட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்கள் ஆகும். இதனால் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் 1 மக்களவைத் தொகுதிக்கும், சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 32 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 150 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1 மக்களவைத் தொகுதியில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல்வர் சாம்லிங், முன்னாள் கால்பந்து வீரர் பைசுங் புட்டியா ஆகியோர் முக்கியமானவர்கள். 120 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு மத்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டப் வாக்குப் பதிவான இன்று இதில் முதல்கட்டமாக, ஆந்திரம் (25), அருணாசலப் பிரதேசம் (2), அஸ்ஸாம் (5), பிகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு-காஷ்மீர் (2), மகாராஷ்டிரம் (7), மணிப்பூர் (1), மேகாலயம் (2), மிúஸாரம் (1), நாகாலாந்து (1), ஒடிஸா (4), சிக்கிம் (1), தெலங்கானா (17), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகண்ட் (5), மேற்குவங்கம் (2) ஆகிய 18 மாநிலங்கள், அந்தமான்-நிகோபார் தீவுகள் (1), லட்சத்தீவு (1) ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பரபரப்பான வாக்குப் பதிவு தொடங்கியது.