தனியார் நிறுவன ஊழியர் பஸ்ஸை கடத்தி வந்து விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டு உயிருக்கு உத்தரவாதம் கேட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரின் மகன் பரசுராமன் 50. இவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஈரோடு பெருந்துறையில் உள்ள, எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூட்டாக நடத்தும் இன்ப்ராடெக்ஸ் என்ற கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு நான்கு மாத ஊதியம் 46,000 ரூபாய் நிலுவையில் இருந்துள்ளது. இதையடுத்து பரசுராமன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்ஸை கடத்தி வந்து விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, வழக்கறிஞர் முன்பு ஆஜரானார்.
அப்போது பரசுராமன் கூறும்போது... இன்ப்ராடெக்ஸ் நிறுவனத்தில் நான் ஓட்டுநராக பணிக்கு சேர்ந்ததில் இருந்து நான்கு மாத நிலுவை சம்பளத்தை கேட்டதற்கு கடந்த 27ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மேலாளர் செல்வகுமார், இளங்கோவன், தேவேந்திரன், செக்யுரிட்டி அதிகாரி ஈஸ்வரன் உள்ளிட்டோர் என்னை திட்டி கடுமையாக தாக்கி கட்டிவைத்து உணவு கூட கொடுக்காமல் சித்திரவதை செய்தனர்.
இதனால் எனக்கு வேலை தேவை இல்லை. நான் வீட்டிற்கு செல்கிறேன். என்னுடைய ஓட்டுனர் உரிமத்தை கொடுங்கள் என கேட்டதால் மீண்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்னை பணிக்கு அனுப்பினார்கள். அப்போது நான் பஸ்ஸில் பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென பெருந்துறை காவல் நிலையத்திலிருந்து ஆறுமுகம் என்ற சப் இன்ஸ்பெக்டர் என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார்.
அப்போது உன்னுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் உன்னுடைய ஊதிய பாக்கியும் காவல்நிலையத்தில் உள்ளது. நீங்கள் பஸ்ஸை திருடிச் சென்றதாக புகார் வந்துள்ளது. உடனடியாக பஸ்சை வந்து ஒப்படைத்துவிட்டு உன்னுடைய ஓட்டுனர் உரிமத்தையும் ஊதியத்தையும் வாங்கிச்செல்லுமாறு மிரட்டல் விடும் தொனியில் கூறினார்கள்.
ஊதியத்தை கொடுங்கள் என கேட்டதற்கு என் மீது பஸ் கடத்தல் புகார் தெரிவித்ததால், சந்தேகம் அடைந்த நான் பஸ்ஸை அங்கிருந்து எடுத்துக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலையில் விருத்தாச்சலம் நீதிமன்ற வளாகத்தில் பஸ்ஸை நிறுத்திவிட்டு வழக்கறிஞர் அருள்குமார் முன்பு ஆஜரானேன்.
என்னை பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அந்த நிறுவனத்தினாலும், சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தாலும், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் என் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். என் உயிருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அந்த நிறுவனமும், சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்த வழக்கறிஞர் அருள்குமார், விருதாச்சலம் இன்ஸ்பெக்டரிடம் பரசுராமனை ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் பரசுராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கடத்தி வந்த தனியார் நிறுவனத்தின் பஸ் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பஸ்சை கடத்தி வந்து விருதாச்சலம் நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டு உயிருக்கு உத்தரவாதம் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.