ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆராய திமுக உயர்நிலைக்குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலில் டெபாசிட் கூட பெறமுடியாமல் திமுக தோல்வியைத் தழுவியது. அக்கட்சியின் வேட்பாளர் மருதுகணேஷிற்கு திமுகவின் வாக்குகள் கூட முழுமையாக விழவில்லை என்று கூறப்படுகிறது. நிர்வாகிகள் சரியாக பணியாற்றாதாலேயே மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. தோல்வி குறித்து ஆராய்வதறாக சட்டப்பேரவை திமுக கொறடா சக்கரபாணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு வரும் 31 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் இடைத்தேர்தல் தோல்வி, திமுகவில் கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.