தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கச் சென்ற கமலஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், அம்பை நொந்து பயனில்லை, அம்பு எய்தவர் யார் என்ற கேள்வியை ஏற்கனவே கேட்டுவிட்டதாக தெரிவித்தார்.
அரசாட்சி உள்ளவர்களுக்கு மனசாட்சி இருக்குமேயானால் அவர்கள் பதவி விலக வேண்டும் எனக் கூறினார். இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.