புதிய தலைமுறை மீது வழக்கு : வைகோ கடும் கண்டனம்

புதிய தலைமுறை மீது வழக்கு : வைகோ கடும் கண்டனம்
புதிய தலைமுறை மீது வழக்கு : வைகோ கடும் கண்டனம்
Published on

புதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கடந்த 08-06-2018 அன்று நடைபெற்றது. விவாத நிகழ்வு குறித்து காவல்துறைக்கு புதிய தலைமுறை சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஞானதேசிகன், தமிழிசை சவுந்தரராஜன், செ.கு.தமிழரசன், செம்மலை, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.பாலகிருஷ்ணன், தனியரசு, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பல அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சி வட்டமேஜை விவாதத்தை முறையாக நடத்தியதற்க்கு ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் காவல்துறையின் அடக்குமுறைக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  

திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் பங்கெடுத்து, அவரவர் கருத்துக்களைக் கூறினார்கள். பாரதிய ஜனதா கட்சியும், தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை விஷமிகள் என்றும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் போராட்டக்காரர்கள்தான் காரணம் என்றும் தவறான கருத்தைப் பதிவு செய்தது. தமிழகத்தை நாசம் செய்யும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவதே தவறு என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க. அநியாயமான கருத்தைப் பதிவுசெய்கிறபோது அங்கு எந்தவிதமான குழப்பமும் இல்லை.பாரதிய ஜனதா கட்சி மற்றவர்களை விமர்சிக்கிறபோது, மற்றவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.பருத்திவீரன் போன்ற மிகச் சிறந்த விருது படங்களை இயக்கிய இயக்குநர் அமீர் ஒரு தமிழ் உணர்வாளர், தமிழீழ உணர்வாளர். அவர் எந்தக் கருத்தையும் சுதந்திரமாகச் சொல்லக்கூடியவர். ஆனால் அவர் சொல்லத் தொடங்குவதற்கு முன்னரே, பாரதிய ஜனதா கட்சியினரும், இந்து முன்னணியினரும் அவரைத் தாக்குவதற்காக மேடையை நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.

இது எந்த வகையில் நியாயம்?இதைவிடக் கொடுமை என்னவென்றால் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தின் பிரதிநிதியாக அங்கு விவாதம் நடத்தச் சென்ற சுரேஷ்குமார் அவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத 123ஏ குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது.பத்திரிக்கைச் சுதந்திரத்தை, தொலைக்காட்சி ஊடகங்களின் சுதந்திரத்தை நீங்கள் பறிக்க வேண்டாம் என்று அரசுக்கு எச்சரிக்கிறேன். உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியுமா? உங்கள் அரசைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். இந்த வழக்கினால் புதிய தலைமுறை தொலைக்காட்சி மிரண்டுவிடாது.புதிய தலைமறை மீது வழக்குப் பதிந்த அக்கிரமத்தை எதிர்த்து ஒட்டுமொத்தமாக அனைவரும் கண்டனம் தெரிவித்து, போராட வேண்டும். புதிய தலைமுறை மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசும், காவல்துறையும் திரும்பப் பெறவேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com