தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது விஷால் மட்டும் கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளின் டிக்கெட் விலை, டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,கடந்த 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல் இருக்கிறது.அத்துடன் படப்பிடிப்புக்கள் உள்ளிட்ட பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, “தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, விரைவில் தயாரிப்பாளர்கள் பிரதிநிதிகளுடன், உயர்மட்ட அதிகாரிகள் குழு பேச்சு வார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும்.தயாரிப்பாளர்கள் சங்க பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. பேரணியை விஷால் வாபஸ் வாங்கி விட்டார். தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது விஷால் மட்டும் கிடையாது. அரசு சில கொள்கை முடிவுகள் அறிவிக்கவுள்ளது. தேவைப்பட்டால், திரைப்படத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும். அதன் மூலமாக நிரந்தரமாக அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்” என்றார்.