முதல்வர் வேட்பாளர்கள் இபிஎஸ், ஸ்டாலின், கமல், தினகரன், சீமான் சொத்து மதிப்பு - ஒரு பார்வை

முதல்வர் வேட்பாளர்கள் இபிஎஸ், ஸ்டாலின், கமல், தினகரன், சீமான் சொத்து மதிப்பு - ஒரு பார்வை
முதல்வர் வேட்பாளர்கள் இபிஎஸ், ஸ்டாலின், கமல், தினகரன், சீமான் சொத்து மதிப்பு - ஒரு பார்வை
Published on

அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அந்தந்த அணிகளின் முதல்வர் வேட்பாளராக திகழ்கின்றனர். வேட்புமனு அடிப்படையில் அவர்களின் சொத்து விவரங்கள் குறித்த பார்வை...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

கடந்த தேர்தலின்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கான அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.3 கோடியே 14 லட்சம். இந்த தேர்தலில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 97 ஆயிரம் ஆக குறைந்திருக்கிறது.

2016-ல் அசையா சொத்துகளின் மதிப்பு 4 கோடியே 66 லட்சம் ரூபாய். தற்போது அதன் அளவு 4 கோடியே 68 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயாக இருந்த கடன் அளவு, தற்போது 29 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் மொத்த சொத்து மதிப்பு 7 கோடியே 80 லட்சம் ரூபாய். தற்போதைய தேர்தலில் அவரது மொத்த சொத்து மதிப்பு 6 கோடியே 70 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. முதல்வர் பழனிசாமிக்கு 100 கிராம் நகையும், அவரது மனைவிக்கு 720 கிராம் நகையும் இருப்பதாக வேட்புமனு தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

கடந்த தேர்தலின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான அசையும் சொத்துகளின் மதிப்பு 1 கோடியே 11 லட்சம் ரூபாய். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அசையும் சொத்துகளின் மதிப்பு 5 கோடியே 25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

2016-ல் அசையா சொத்துகளின் மதிப்பு 4 கோடியே 72 லட்சம் ரூபாய். தற்போது அசையா சொத்துகளின் அளவு 3 கோடியே 63 லட்சம் ரூபாயாக குறைந்திருக்கிறது. 2016-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு 5 கோடியே 84 லட்சம் ரூபாய். தற்போதைய தேர்தலில் அவரது மொத்த சொத்து மதிப்பு 8 கோடியே 88 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஸ்டாலின் சொத்து மதிப்பு 3 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. மு.க.ஸ்டாலின் துணைவியாருக்கு சொந்தமாக 720 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:

அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் சொத்து மதிப்பு 7 கோடியே 85 லட்சத்து 95 ஆயிரத்து 215 ரூபாயாக உள்ளது. அசையா சொத்து மதிப்பு 3 கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 325 ரூபாயாக உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு 10 கோடியே 87 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

மேலும், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் டாடா சபாரி காரும், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் மகிந்திரா ஸ்கார்பியோவும் டிடிவி தினகரனின் மனைவி பெயரில் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனது மனைவிக்கு சொந்தமாக ஆயிரத்து 48 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழகம் மற்றும் லண்டனில் சொத்து இருப்பது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது. அவருக்கு, 45 கோடியே 9 லட்சம் ரூபாய் அளவில் அசையும் சொத்தும், 131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. அதோடு அவரது கடன் தொகையின் அளவு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாயாகும்.

மொத்தமாக கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாயாக உள்ளது. மேலும் அவருக்கு 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் லெக்சஸ் மாடல் காரும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரும் உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு லண்டனில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான அசையும் சொத்தின் மதிப்பு 94 லட்சத்து 31ஆயிரம் ரூபாயும், அசையா சொத்துக்களின் மதிப்பு 87லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. அதோடு அவரது கடன் தொகையின் அளவு 6.9 லட்சம் ரூபாயாகும். மொத்தமாக சீமானின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட தொகையாக ஆயிரம் ரூபாயை சீமான் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சீமானுக்கு சொந்தமாக 26 லட்சம் மதிப்புள்ள காரும், அவரது மனைவிக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு சொகுசுகார்களும் உள்ளன. தங்கத்தை பொருத்தவரை, சீமானுக்கு 150 கிராம் தங்கமும், அவரது மனைவிக்கு ஆயிரத்து 600 கிராம் தங்கமும் இருப்பதாக சொத்துமதிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com