“மீம்ஸ் போட்டு கலாய்ப்பது சிறுபிள்ளைத்தனம்” - ‘அழகு’ பற்றி தமிழச்சி விளக்கம்

“மீம்ஸ் போட்டு கலாய்ப்பது சிறுபிள்ளைத்தனம்” - ‘அழகு’ பற்றி தமிழச்சி விளக்கம்
“மீம்ஸ் போட்டு கலாய்ப்பது சிறுபிள்ளைத்தனம்” - ‘அழகு’ பற்றி தமிழச்சி விளக்கம்
Published on

அழகான வேட்பாளர் என உதயநிதி கூறியது குறித்து தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் தென்சென்னை தொகுதிக்கான திமுகவின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய உதயநிதி “என்னுடைய அக்கா தமிழச்சி. அவரும் என்னை தம்பி என்றே பாசத்துடன் அழைப்பார். இது இப்போது அல்ல. மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து வரும் நட்பு. உண்மையாகவே தலைவர் கருணாநிதி மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த பாசமும் நட்பும் வைத்திருப்பவர். அந்த நட்பே அவருக்கு வெற்றியை பெற்றுத்தரும் என நம்புகிறேன். தென்சென்னை மக்களை கேட்டுக்கொள்வது இவ்வளவு அழகான வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். நான் அழகு என்று கூறியது அவரது தோற்றத்தை வைத்து மட்டுமல்ல. அவரது அழகு தமிழ், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவரது கொள்கை, திமுகவின் மீது கொண்டுள்ள கொள்கை பிடிப்பு ஆகியவற்றை வைத்து தான் சொன்னேன்.” எனப் பேசினார்.

ஆனால் தமிழச்சி தங்கப்பாண்டியனை உதயநிதி அழகான வேட்பாளர் என்று கூறியது சமூக வலைத்தளங்களில் சரமாரியாக விமர்சிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது “முதல் வரியை பிடித்து கொண்டு தொங்குவது, மீம்ஸ் போட்டு கலாய்ப்பது எல்லாம் சிறுபிள்ளைத் தனமானது. என்னுடைய உடன்பிறவாத சகோதரர் உதயநிதி. முழுமையாக என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு பேச வேண்டும். நேர்த்தியாக பொதுவெளிக்கு வரக்கூடிய பெண்கள் குறித்து சொல்லப்படுகின்ற விமர்சனங்கள் வேறு. ஒரு பெண் தன்னை நேர்த்தியாக தனக்கே உரிய ரசனையாக வைத்து கொள்ள வேண்டும் என்பது அவளின் தனிப்பட்ட உரிமை.

அது அவளின் அழகும் ரசனையும் சார்ந்த விஷயம். ஒரு நல்ல கருத்தில் அறிவு என்பது அழகு. தமிழ் இலக்கிய பற்று என்பது அழகு. இயக்கத்தின் மீது வைத்திருக்கின்ற கொள்கை பிடிப்பு அழகு என்று எனது சகோதரர் உதயநிதி சொல்வதை விஷமத்தனமாக திரித்து கூறினால் அதுகுறித்து எல்லாம் எங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க நாங்கள் தயாராக இல்லை” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com