உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவிக்காக எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வு பிரச்னை உச்சக் கட்டத்தில் இருந்த போது, அரசியல்வாதிகளுக்கும் இதுபோன்ற தேர்வு வைத்தால் என்ன என்று பலரும் மீம்ஸ் பதிவிட்டார்கள். விளையாட்டாக பதிவிட்ட அந்தக் கருத்து தற்போது உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
செய்தித் தொடர்பாளர் பதவிக்காக காங்கிரஸ் கட்சி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வைத்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 65க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
எழுத்துத் தேர்வில் மொத்தம் 14 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உத்தப்ரபிரதேசத்தில் எத்தனை மாவட்டங்கள், மண்டலங்கள் உள்ளன?, மன்மோகன் சிங் ஆட்சியின் சாதனைகள் என்ன? உள்ளிட்ட கேள்விகள் இருந்தன. அதேபோல், பாஜக ஆளும் மத்திய, மாநில அரசுகளின் தோல்விகள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
சில கேள்விகள்:-
உத்தரப் பிரதேசத்தில் எத்தனை மாவட்டங்கள், மண்டலங்கள் உள்ளன?
உத்தரப் பிரதேசத்தில் எத்தனை மக்களவை தொகுதிகள் தனித் தொகுதிகள்?
காங்கிரஸ் கட்சி 2004, 2009ம் ஆண்டுகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது?
காங்கிரஸ் கட்சி 2014 மக்களவை தேர்தல், 2017 சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் எத்தனை மக்களவை, சட்டசபை தொகுதிகள் உள்ளன?
உ.பியில் எத்தனை சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது ஒரு மக்களவை தொகுதி?
யோகி ஆதித்யநாத் அரசின் தோல்விகள் என்னென்ன?
மன்மோகன் சிங் ஆட்சியின் சாதனைகள் என்னென்ன?
இன்றைய 3 முக்கிய தலைப்புச் செய்திகள் என்ன?
நீங்கள் ஏன் செய்தித் தொடர்பாளர் ஆக நினைக்கிறீர்கள்?
நேர்முகத் தேர்வை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரோஹன் குப்தா நடத்தினார்கள். இந்தத் தேர்வுகள் குறித்து சதுர்வேதி கூறுகையில், “மாநிலத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்க வேண்டுமென்றால், மாநிலம் தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடிப்படை விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். அதனால், அவர்களை தேர்வு செய்ய இதுதான் வழி. அவர்கள் தான் கட்சியின் முகமாக இருப்பார்கள். மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் பிரச்னைகள் குறித்து அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றார்.
தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக, தேர்வில் பங்கேற்ற சிலர் கூறினர். இது ஒருபுறம் இருக்க, கேள்வித் தாள் லீக் ஆனதாகவும் செய்திகள் வெளியானது. தேர்வு நடப்பதற்கு முன்பாகவே கேள்வித் தாள் சமூக வலைத்தளங்களில் போட்டோவாக பரவியுள்ளது.
இதற்கு முன்பாக, குஜராத், கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற தேர்வுகளை நடத்தியுள்ளது.