அரியலூர் அருகே கிராமம் கிராமமாக சென்று மாணவ மாணவிகளுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுத்தரும் ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள குவாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தத்தனூர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பட்டதாரி படிப்பு முடித்து கராத்தே பயிற்சியில் நன்கு பயிற்சி பெற்றவர்.
தான் அறிந்த கலைகளை அனைத்துப் பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஊர் ஊராக சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், யோகா, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகளை இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தான் கற்ற கலைகளை பண ஆதாயம் ஏதும் எதிர்பார்க்காமல் சேவையாக பலரும் கற்று பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும். ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்புத் திறன், மன திறன், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பயிற்சி அளித்து வருகிறேன்.
மேலும் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் எந்த கலையில் அதிக ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட கலையில் பயிற்சி அளித்து வருகிறேன். அவர்கள் சாதனை புரிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு தற்காப்புக்கலை அவசியம்” என சரவணன் தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி மாணவி ரோஷினி கூறும்போது “தமக்கு மாஸ்டர் மிகவும் திறமையாக பயிற்சி அளிக்கிறார். ஒலிம்பிக்கில் சென்று வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை. எனது பெற்றோர்களும் அதனையே விரும்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.