தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மோதும் ராஜாக்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் பாரதிராஜாவை சுட்டிக்காட்டி ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து இயக்குனர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட ஆடியோவில்
“செம்மொழியான தமிழ் மொழியை ஒரு மூத்த மடாதிபதி அவமானப்படுத்தியிருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? வாழ்வது தமிழ் மண். சுவாமிப்பது தமிழ்க் காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு” உள்ளிட்ட பல எதிர்ப்பு கருத்துகளை கூறியிருந்தார். மேலும் “தள்ளாத வயதிலும் தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்தியவர் பெரியார். கடவுள் எதிர்ப்பாளரான பெரியார் கூட கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்றார்'' என குறிப்பிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “தள்ளாத வயதிலும் தமிழ் தாய் வாழ்த்திற்கு தள்ளாத வயதிலும் எழுந்து நின்றவர் பெரியார் என்று ஒருவர் கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன?” எனக் கேள்வி எழுப்பி, பெரியார் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது போன்ற மேற்கொள் ஒன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் பாரதிராஜாவின் கருத்தை ஹெச்.ராஜா சூசகமாக விமர்சித்துள்ளார்.