அரசுப் போக்குவரத்து கழக சொத்துக்கள் சூறையாடல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசுப் போக்குவரத்து கழக சொத்துக்கள் சூறையாடல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசுப் போக்குவரத்து கழக சொத்துக்கள் சூறையாடல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Published on

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களை சூறையாடி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அதிமுக அரசு தடைக்கல்லாக இருப்பதாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுப் போக்குவரத்துக்கழக சொத்துகள் அடமானம் வைக்கப்பட்டிருப்பதாக புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், இதுதொடர்பான அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டடங்கள், பேருந்துகள், பணிமனைகள் உள்ளிட்டவற்றை 2,453 கோடி ரூபாய்க்கு அடகு வைத்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருவதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நிலை நீடித்தால் தலைமைச் செயலகத்தையே மத்திய அரசுக்குத் தெரியாமல் அதிமுக அரசு அடகு வைத்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும், ஸ்டாலின் கூறியுள்ளார். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களையும் அடகு வைத்து, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியங்களை எல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் செலவிட்டு, அரசுப் போக்குவரத்து கழகத்தையே மீட்கமுடியாத படுகுழியில் தள்ளிவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, அடகு வைக்கப்பட்ட போக்குவரத்துக் கழக பேருந்துகள், பணிமனைகளை உடனடியாக மீட்டுப் புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களை சூறையாடி தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அதிமுக அரசு தடைக்கல்லாக இருப்பதைக் கிஞ்சிற்றும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

முன்னதாக பணிமனைகள் மற்றும் அரசுப் பேருந்துகள் என தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொத்துகள் பல கோடி ரூபாய்க்கு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் தகவலை வெளி்க்கொண்டு வந்தது புதியதலைமுறை. தகவலறியும் உரிமைச் சட்டம் கீழ் கிடைத்த தகவலை, செய்தியாக வெளியிட்டிருந்தது. 
தனியார் நிறுவனங்கள் ஒரு சில பேருந்துகளை மட்டும் வைத்து கொண்டு லாபகரமாக இயங்கி வரும் நிலையில் 22ஆயிரத்து 743 பேருந்துகளுடன் செயல்படும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி‌வருகிறது. இதன் உண்மை காரணத்தை தெரிந்து கொள்வதற்காக, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விண்ணப்பித்தார். போக்குவரத்து கழகங்கள் மூலம் அவருக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சென்னை போக்குவரத்து கழகத்தின் கீழ் 34 பணிமனைகளும், தலைமையகத்தின் 33 பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. அதில், அயனா‌வரம், மந்தைவெளி, அண்ணாநகர், அம்பத்தூர், பேசின்பாலம், சைதாப்பேட்டை, திருவான்மியூர், பெரம்பூர், தியாகராய நகர் பணிமனை பேருந்து நிலையங்கள் அடமானத்திலிருப்பது தெரியவந்துள்ளது. சென்னை போக்குவரத்து கழகத்தின் அடையாளமான பல்லவன் இல்லம், பட்லஸ் சாலையிலுள்ள போக்குவரத்து தொழிற்சாலை, 4‌90 பேருந்துகள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சொத்துகள் மட்டும் 580 கோடியே 63 லட்சத்திற்கு வங்கிகளிலும், அரசிடமும் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. மதுரை போக்குவரத்து கழகத்தின் 39 பணிமனைகளில் 30 பணிமனைகள் 363 கோடியே 77 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. கோவை போக்குவரத்து கழகத்தில் 377 பேருந்துகளுடன், அதன் அனைத்து சொத்துகளும் ஆயிரத்து 466 கோடியே 65 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com