மற்ற மாநிலங்களில் பெரியார் பிறக்கவில்லை, இங்குதான் அவர் பிறந்தார் அதனால் போராடுகிறோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ரதயாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?”என கடுமையான பேசினார்.அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
இதன்பின்னர் சாலையில் அமர்ந்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
கேள்வி: மற்ற மாநிலங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் மட்டும் போராட்டம் ஏன்?
பதில்: மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரியார் பிறக்கவில்லை. தமிழகத்தில்தான் பெரியார் பிறந்தார். அந்த உணர்வு எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் பிறந்த அண்ணா எங்களை உருவாக்கி இருக்கிறார்.
கேள்வி:ரத யாத்திரை நடைபெறும் வேளையில் புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது?
பதில்: அதையும் இந்த ஆட்சி வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரியார் குறித்து ஹெச்.ராஜா பேசியபோது இந்த அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.