இத்தனை ஆண்டு கால என் பொதுவாழ்க்கைக்கு தூத்துக்குடி தொகுதி மக்கள் ஒரு அங்கிகாரத்தை தர வேண்டும் என்ற வேண்டுகோளோடு வாக்குகளை சேகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இத்தனை ஆண்டு கால என் பொதுவாழ்க்கைக்கு தூத்துக்குடி தொகுதி மக்கள் ஒரு அங்கீகாரத்தைத் தர வேண்டும் என்ற வேண்டுகோளோடு வாக்குகளைச் சேகரித்துள்ளேன். அதனால் எனக்கு எந்த எதிர்மறையும் கிடையாது.
எந்த ஒரு ஊழல் வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் கிடையாது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்து கொண்டிருக்கிறேன். அதனால் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். தமிழகத்தில் தேர்தல் கணிப்புகளை கணிக்க முடியாது என்பதற்கு காரணம், இரண்டு மிகப்பெரிய ஆளுமைகள் இன்று இல்லை.
அதேபோல் மூன்று புதிய முகங்கள் வந்துள்ளன. கமல்ஹாசன், சீமான், தினகரன் ஆகியோர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதை சொல்ல முடியாது. மக்கள் வெளியே வந்து இந்தக் கட்சிக்குதான் வாக்களித்தேன் எனச் சொல்வார்களா என்பது கேள்விக் குறி. இதனால் தமிழக தேர்தலை கணிக்க முடியாது என்று சொல்கிறேன். நான் களத்தில் நின்றவள் என்ற முறையில் சொல்கிறேன், நிச்சயமாக அதிமுக, பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தந்திருப்பார்கள். மீண்டும் மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் எங்களுடையது” எனத் தெரிவித்தார்.