பணியிடை நீக்கம் செய்வது, இழப்பீடு வழங்குவது உயிரிழப்புகளுக்கு ஈடாகாது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர்.நகரில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 8 மின்வாரிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கும் அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடல்களுக்கு தமிழிசை இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியிடை நீக்கம் மட்டுமே தீர்வாகாது என்றும், அபாயகரமான இடங்களைக் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும் இழப்பீடு வழங்குவது உயிரிழப்புகளுக்கு ஈடாகாது என்றும் தமிழிசை தெரிவித்தார்.