நாட்டை காவிமயமாக்க பாஜக முயற்சிக்கிறது என்ற மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு, “நாட்டில் காவிகள் இருக்கலாம், பாவிகள்தான் இருக்கக் கூடாது” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் வைர விழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, கருணாநிதியின் வைர விழா பிரதமர் மோடியை விமர்சிக்கும் விழாவாக தான் நடந்தது. கூட்டம் கூடி குரல் எழுப்பினாலும் மத்திய அரசை அசைக்க முடியாது. நாட்டை காவிமயமாக்க பாஜக முயற்சிக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்; நாட்டில் காவிகள் இருக்கலாம், ஆனால் பாவிகள்தான் இருக்கக் கூடாது என்று தமிழிசை கூறினார்.
முன்னதார நேற்று இரவு கருணாநிதியின் வைர விழா நடந்துகொண்டிருந்தபோதே தனது டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு விமர்சனங்களை தமிழிசை தெரிவித்தார். அதில், முத்தமிழறிஞரின் விழாவில் ஒலித்த இந்தி உரைக்கு கைதட்டல் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியை எதிர்த்தவர்கள் ரகசியமாக இந்தி படிப்பது தெரிகிறது. தமிழர்கள்தான் ஏமாந்து போனார்கள் என்றும், தேர்தல் வாக்குறுதி எதையுமே நிறைவேற்றவில்லை என்கிறார்கள், மக்கள் பணம் மக்களுக்கே என்ற ஊழலற்ற மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை 2ஜி ஊழல் பங்காளிகளின் அரசியல் வாரிசுகள் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன் என்றும், திமுகவுக்கு ஆட்சி பெரிதல்ல; கொள்கையே பெரிது என்ற ஸ்டாலினின் பேச்சுக்கு, “ஆம் கொள்ளையே பெரிது. விஞ்ஞானபூர்வமான ஊழல் செய்தவர்கள் அல்லவா?” என்றும் கருத்து தெரிவித்தார்.