காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தஞ்சாவூரில் தனது இல்லத்தில் இருந்து பெ.மணியரசன் இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையம் நோக்கி கிளம்பியிருக்கிறார். தஞ்சை ரயில் நிலையம் அருகே பெ.மணியரசன் மீதும் மற்றும் உடன் வந்த சீனு என்பவர் மீதும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பலத்த காயம் அடைந்த பெ.மணியரசன் மருத்துவ மனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பெ.மணியரசன் மீதான அத்தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மணியரசன் மீதான தக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மண்ணின் உரிமை - நலன்களுக்கு எதிரானவர்கள்தான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தாக்குதல்களால் தமிழ் மண்ணின் உரிமைகளை நலன்களை முடக்கிவிடமுடியாது என்றும் அதற்கான போராட்டத்தில் அலை அலையாய் மக்கள் திரள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.