பண்ருட்டியில் சொந்த வீட்டில் போலியாக வங்கிக்கிளை நடத்தியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் எஸ்பிஐ வங்கிக்கிளையை தன்னுடைய வீட்டில் நடத்தியதாக கைது செய்யப்பட்ட அந்த இளைஞரின் பெயர் கமல் பாபு (19). அவருடன் வங்கியில் பணம் எடுக்க, செலுத்த பயன்படுத்தப்படும் செல்லான்களை போலியாக தயார் செய்ததாக மாணிக்கம் (52) என்பவரும் கைதாகியுள்ளார். இளைஞர் ஒருவர் தன்னுடைய சொந்த வீட்டில் ‘எஸ்பிஐ வங்கியின் வடக்கு பஜார் கிளை’ எனப் போலியாக நடத்தி வருவதாக பண்ருட்டி எஸ்பிஐ வங்கியின் மேலாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
போலீசர் நடத்திய விசாரணையில் பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர் கமல் பாபுவின் பெற்றோர்கள் இருவரும் எஸ்பிஐ வங்கியில் பணியாற்றிவர்கள். அவரின் தந்தை கடந்த 2007ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கமல் பாபுவிற்கு வேலைகிடைக்க முயற்சி செய்துள்ளனர். முதலில் அவர் மைனர் எனக் கூறு வங்கி மறுத்துவிட்டது. பின்னர், 18 வயது பூர்த்தி அடைந்த நிலையில், மீண்டும் எஸ்பிஐ தலைமை அலுவலகத்திற்கு வேலை கேட்டு மெயில் அனுப்பியிருக்கிறார் கமல் பாபு. ஆனால், அந்த மெயிலுக்கு எந்தவொரு பதிலும் வரவில்லை என்று தெரிகிறது. வேலை எப்படியும் கிடைத்துவிடும் என நீண்ட நாட்களாக காத்திருந்த அவர், ஒரு கட்டத்தில் தனக்கு நிச்சயம் வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
பின்னர், தன்னுடைய வீட்டிலே சொந்தமாக வங்கியை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார். இவர் எப்படி இந்த முடிவுக்கு வர முடிந்தது என்றால், தாய், தந்தை இருவரும் வங்கியில் வேலை பார்த்தவர்கள். அவர் வேலை பார்த்த காலங்களில் வங்கிக்கு அடிக்கடி சென்று வந்ததால் அங்கு நடக்கும் வேலைகளை அறிந்திருந்தார். அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளார். ஆனால், விரைவிலே அவர் சிக்கிக் கொண்டார். மோசடி வழக்கில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.