டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
வழக்கமாக ஒரு எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் அவருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். கடிதம் மூலமாகவோ நேரிலோ 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன்படி, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தன்பால் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.