சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி வரும் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்பிக்களும் தங்கள் கட்சியின் தலைவர்களும் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. மைனாரிட்டியாக உள்ள அரசு தொடர்ந்து நீடிக்கக் கூடாது. பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்தார். இதன் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் என்று கூறினார். அதனடிப்படையில் வரும் 31 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.