ஐந்து ஆண்டுகளுக்கும் தமிழகத்தின் ஆளுநராக தாமே தொடரப்போவதாக பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட சில இடங்களில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டுள்ள ஆளுநர், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிட்ட அவர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சப்பாணிப் பட்டியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ் மொழி இனிமையான மொழி என்றும் புகழாரம் சூட்டினார். இதன் பின்னர் திம்மாபுரம் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார கழிப்பிடங்கள், கிராமப்புற சுகாதர நலத்திட்டங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே, கிருஷ்ணகிரியில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடி அருகே திமுகவினர் கறுப்புக் கொடியுடன் முழக்கங்களை எழுப்பினர்.