எட்டு வழிச்சாலை வருமா ? வராதா ? - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..!

எட்டு வழிச்சாலை வருமா ? வராதா ? - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..!
எட்டு வழிச்சாலை வருமா ? வராதா ? - முதலமைச்சர் பழனிசாமி சூசகம்..!
Published on

எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சுக்கு எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நிலம் எடுக்காமல் சாலை அமைப்பது எப்படி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எட்டு வழிச்சாலை தொடர்பாக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அத்துடன் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் 8 வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் திட்டத்தில் செயல்படுத்த அவசரகதியில் மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும், அதற்கு கடும் கண்டனத்தையும் நீதிமன்றம் தெரிவித்தது.

உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இருப்பினும் தீர்ப்பு குறித்து அன்றே பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சாலை வசதி என்பது இன்று சமூகத்தினுடைய கட்டமைப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மிக அவசியம். அதற்காகத் தான் முதலமைச்சர் பழனிசாமி 8 வழிச்சாலை திட்டத்தையே கொண்டு வந்தார். மற்றபடி, இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. தமிழக அரசு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்” என்று கூறினார். 

முதலில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி உயர்நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று மட்டும் தெரிவித்தார். ஆனால், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் நிதி கட்காரி 8 வழிச்சாலை நிச்சயம் கொண்டு வரப்படும் என்பதுபோல் கருத்து தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நிதின் கட்காரி முதலமைச்சர் பழனிசாமி, ராமதாஸ் உள்ளிட்டோரை மேடையில் வைத்து கொண்டே 8 வழிச்சாலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். “சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழி பசுமைச் சாலை இப்பகுதியின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு கொடுக்கப்படும். விவசாயிகளிடம் கலந்து பேசி 8 வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் முதல்வர் மிகுந்த அக்கறைக் காட்டி வருகிறார். அதனால் இந்த பசுமை வழிச் சாலை நிறைவேற்றப்படும். நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், மக்களிடம் திட்டம் குறித்து பேசுவோம். மக்களிடம் பேசி திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார். 

அதேபோல், 8 வழி சாலை திட்டத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் இப்பகுதிக்கு மிகவும் அவசியமான திட்டமாகும். எனவே, நிலம் கையகப்படுத்தப்படும்போது, இப்போதுள்ள விலையை விட கூடுதலாக விலை கொடுத்து, நிலம் கையகப்படுத்தப்படும். 

மேலும், திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு திட்டத்தைச் செயல்படுத்துவோம். சென்னை- சேலம் 8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும்போது யாரும் எதையும் தடை செய்யமுடியாது. சிலரின் தூண்டுதலால்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தெளிவாகக் கூறினார்” என்றார். 

இதனிடையே, 8 வழிச்சாலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், நிதின் கட்காரி பேசிதற்கு முதல்வர் பழனிசாமி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் இன்று போராட்டமும் நடைபெற்றது. 

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி இன்று எட்டு வழிச்சாலை குறித்து பேசியுள்ளார். “கோவை, ஈரோடு, கரூர் மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வந்ததுதான் 8 வழிச்சாலை திட்டம். விவசாயிகளின் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என நிதின்கட்காரி உறுதியளித்துள்ளார். 

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். புறவழிச்சாலை அமைய வேண்டும் என்றால் நிலத்தை எடுத்துதான் ஆக வேண்டும். இந்த திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம், நிலம் கையகப்படுத்த வேண்டியது மட்டுமே மாநில அரசின் பணி. நிலமும் எடுக்கக் கூடாது, சாலையும் அமைக்கக் கூடாது என்றால் எப்படி முடியும்?. தற்போதைய ஆட்சியில் ஆன்லைன் மூலம் டெண்டர் நடத்தப்படுவதால் முறைகேட்டிற்கு வாய்ப்பில்லை” என முதல்வர் பேசியுள்ளார்.

இதனிடையே, சேலம்-சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பேசிய பாஜக அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் மறுப்பு தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர்  ராமதாஸ் ஆகியோருக்கு திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com