திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. இந்தத் தேர்தலிலும் சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் மக்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே நிலையே முதலாவது மற்றும் இரண்டாவது வாக்குப்பதிவின் போதும் நடந்தது. இதனால் வாக்களிக்க முடியாமல் போனவர்கள் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அத்துடன் பலர் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு புகார்களையும் அளித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், “கர்நாடகா தெற்கு தொகுதியில் வேண்டுமென்றே அதிக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகாரிகள் எவ்வித காரணமும் இன்றி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர். இது ஆளும் காங்கிரஸ்- மதசார்ப்பற்ற ஜனநாயகம் கட்சிகளுக்கு சாதகமாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ‘மிஸ்ஸிங் ஓட்ஸ்’ அப்பின் நிறுவனர் காலித் சைஃபுல்லா, “வாக்காளர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்குவது ஒரு குழந்தை தனமான செயல். குடிபெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயரை நீக்கும் முறையில் முறைக்கேடாக நிறைய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவிலும் இதே போன்று தான் நடந்திருக்கும் என அம்மாநில காவல்துறையினர் கருதுகின்றனர், மேலும் அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகள் முறைகேடாக தங்களுக்கு வாக்காளிக்காதவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிகிறது.
அத்துடன் தேர்தல் ஆணையம் ஃபார்ம் 20 இன் மூலம் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளின் தகவல்களை அரசியல் கட்சிக்களுக்கு வழங்கும். இதனை வைத்து அரசியல் கட்சிகள் தங்களுக்கு எந்த இடங்களில் அவர்களுக்கு வாக்குகள் வந்தது என தெரிந்துகொள்வார்கள். இதனால் எந்த இடங்களில் அவர்களுக்கு வாக்கு வங்கி குறைவாக உள்ளதோ அங்கு அவர்கள் வாக்காளர்களில் சிலரின் பெயரை நீக்கமுடியும். அதாவது தேர்தல் ஆணையத்தின் படிவம் 7ஏயின் படி யார் வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது தொடர்பாக அல்லது நீக்குவது தொடர்பாக புகார் அளிக்கலாம். இந்த முறையில் ஒழுங்கான சரிபார்ப்பு இல்லாததால் இதில் அதிகமான வாக்காளர்களை நீக்க கோரிக்கை வரும் ”என தெரிவித்துள்ளார்.