முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்ற சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் பாஜக அலுவலகத்தில் மறைந்த வாஜ்பாய் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பாஜக அலுவலகம் இருந்த தீனதயாள் உபாத்யாயா மார்க் வழியே அக்னிவேஷ் சென்றார். அப்போது சிலர் அக்னிவேஷ் மீது திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். அவரை அடித்து வெளியே துரத்தும் முயன்றனர். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றனர்.
கொத்தடிமை முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருபவர் சுனாமி அக்னிவேஷ்(79). புரி ஜெகன்னாதர் கோயிலில் வழிபட இந்துக்கள் அல்லாதோருக்கும் அனுமதி தரவேண்டும் என்ற கோஷத்தை சுவாமி அக்னிவேஷ் எழுப்பினார். சமீபகாலமாக அக்னிவேஷின் செயல்பாடுகளும், அவர் தெரிவித்து வரும் கருத்துக்களும் இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜூலை 17ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் லிட்புரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அக்னிவேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரில், பா.ஜ.க இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர்தான் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read -> வாஜ்பாய் குறித்த 10 தகவல்கள் !
இந்நிலையில் தான், வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அக்னிவேஷ் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் அக்னிவேஷை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.