கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்க உத்தரவிடக் கோரி கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது ஜுலை 16 ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார். இருப்பினும், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா மனுக்கள் மீது ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இருதரப்பிலும் நியாயம் இருப்பதாக கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜினாமா கடிதத்தை ஏற்க குறிப்பிட்ட கால அவகாசம் எதனையும் நிர்ணயிக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் விருப்பம் என்றும் அவர்களை கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நாளை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.