ராமர் கோயில் கட்டுவதை மத்திய பிரதேச மாநிலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கமல்நாத் மற்றும் திக் விஜய் சிங் ஆதரித்ததற்காக கேரள மாநில காங்கிரஸ் எம்.பி ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி டி.என் பிரதாபன் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். கடிதத்தில் ’மூத்த தலைவர்களான கமல்நாத் மற்றும் திக் விஜய் சிங் ராமர் கோயில் கட்டுவதற்கு நீடித்த ஆதரவை வழங்குவது ஏன்?’ என்று கேள்விக்குட்படுத்தியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், அயோத்தி ராமர் கோயில் கட்டுவதில் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து நான் விலகவில்லை. முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் ராஜீவ் காந்தியின் கொள்கைகளிலிருந்து நான் விலகவில்லை. ஏற்கனவே, ராமர் கோயில் பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றுவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதையே நானும் பின்பற்றுகிறேன். நான் எல்லா மதங்களையும் மிகுந்து மதிக்கும் பக்தியுள்ள இந்து” என்று தெரிவித்துள்ளார், கமல்நாத்.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ராமர் கோயில் கட்டும் நிகழ்வை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மோடி அயோத்தியில் அடிக்கல் நாட்டி செயல்படுத்தினார். இந்த நிகழ்வை வரவேற்றுதான் கமல்நாத் மற்றும் திக் விஜய் சிங் ஆதரித்திருந்தார்கள். இந்த செயல்களுக்குத்தான், கேரள எம்.பி “இது தற்காலிக வெற்றிகளுக்கு குனிந்து செல்வது” என்றும் பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்போது கமல்நாத் அவரது வீட்டில் அனுமன் பூஜயை செய்ததோடு ராமர் கோவிலுக்கு 11 வெள்ளி செங்கற்களை அனுப்புவதாகவும் சொல்லியிருந்தார், என்பதும் சர்ச்சைகளுக்கு காரணம்.