கர்நாடகா மாநிலம் மாண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக நடிகை சுமலதா இன்று தெரிவித்தார்.
தமிழில், திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்த வர் சுமலதா. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் வசித்து வருகிறார். அம்பரீஷ் கடந்த வருடம் நவம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இதையடுத்து வரும் மக்களவைத் தேர்தலில், அம்பரீஷ் போட்டியிட்ட, மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவதாக, சுமலதா கூறியிருந்தார். ஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடா வை களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை விட்டுத்தர முடியாது எனவும் தெரிவித்து விட்டார்.
இருந்தாலும் மண்டியாவில் போட்டியிட, காங்கிரஸ் தமக்கு வாய்ப்பு வழங்கும் என்றும், இல்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்றும் சுமலதா தெரிவித்திருந்தார். சுமலதா, சுயேச்சையாக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக பாஜக தெரிவித்திருந்தது. பாஜக தலைவர் கள் சிலர் அவரை சந்தித்து பேசி வந்தனர். முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை சுமலதா சந்தித்து ஆதரவு கோரினார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுமலதா, ’’அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 18 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன்’’ என்று கூறியிருந்தார். அதன்படி செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’’மாண்டியா தொகுதியில் நான் சந்தித்தவர்களிடம், என் கணவர் (அம்பரீஷ்) மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை யை தெரிந்து கொண்டேன். அந்த நம்பிக்கையை, அன்பை அவர்கள் எனக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான் சுயேச்சையாகப் போட்டியிடும் முடிவு, யாரையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் கணவரின் வழியில் என் அரசியல் பயணத்தைத் தொடர்கிறேன்’’ என்று தெரிவித்தார்.