பூந்தமல்லி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு வேலைக்கு செல்வோர் பாதிப்படைந்தனர்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து உள்ளது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூந்தமல்லி தனித்தொகுதி அதிமுகவினருக்கு ஒதுக்கப்படும் என அதிமுகவினர் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதில், திடீர் திருப்பமாக பூந்தமல்லி தொகுதியை அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியான பாமக-விற்கு ஒதுக்கியது. இதனால் அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பூந்தமல்லி முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த நிலையில், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நசரத்பேட்டையில் பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதனால் கல்லூரி, பள்ளி, வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பூந்தமல்லி தொகுதி அதிமுகவினருக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் பின்னர் போராட்டத்தை அவர்கள் கலைத்தனர். எனினும் அதிமுக தலைமையகமான ராயப்பேட்டை சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.