ஜெயலலிதா இல்லாத நாடாளுமன்றத் தேர்தல் : இழந்தது என்ன? பெற்றது என்ன?

ஜெயலலிதா இல்லாத நாடாளுமன்றத் தேர்தல் : இழந்தது என்ன? பெற்றது என்ன?
ஜெயலலிதா இல்லாத நாடாளுமன்றத் தேர்தல் : இழந்தது என்ன? பெற்றது என்ன?
Published on

அஇஅதிமுக ஜெயலலிதா இல்லாமல் தனது இரண்டாவது தேர்தலை சந்திக்க உள்ளது. முதல் தேர்தல் ஒரு இடைத்தேர்தல். இரண்டாவது சந்திக்க உள்ள தேர்தல், ஒட்டுமொத்த இந்திய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல். ஆளும் கட்சியாக இருந்தும் அதிமுக தனது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியையே தக்க வைக்க முடியாமல் போனது ஒரு வரலாற்று சோகம். 

அந்த இடத்தை எளிதாக பிடித்துவிடலாம் என நம்பிக் கொண்டிருந்த எதிர்க்கட்சியான திமுகவும் தவறவிட்டது ஒரு அதிரடி திருப்பம். யாரும் எதிர்பாராமல் டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஒரு சக்தியாக உருவெடுத்தார். இந்தச் சின்ன பின்புலத்தோடுதான் இப்போது ஜெயலலிதா இல்லாத அதிமுக தன் அடுத்த கட்ட இன்னிங்சை தொடங்க உள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அதிமுக மொத்தம் 37 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதிமுக அரசியல் வரலாற்றிலேயே இது ஒரு அற்புதமான காலகட்டம். எம்ஜிஆர் காலத்தில் கூட சாதிக்க முடியாத பெரும் வெற்றியை அதிமுகவிற்கு சம்பாதித்துக் கொடுத்ததன் மூலம் இந்திய அரசியலில் மூன்றாவது பெரும் கட்சியாக அதிமுகவை வளர்த்தெடுத்திருந்தார் ஜெயலலிதா. 

37 தொகுதிகள் என்றால் மொத்தம் 222 சட்டமன்றத் தொகுதிகள். இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்த மொத்த வாக்குகள் 1,79,83,168. இந்தக் கணக்கின்படி பார்த்தால் 2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி 222 எம்.எல்.ஏக்களுக்கு மேல் அதிமுக பெற்றிருக்க வேண்டும். ஆனால் இத்தேர்தலில் 136 சட்டமன்ற உறுப்பினர்களையே இவர்களால் ஈட்ட முடிந்திருந்தது.  2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற (151) எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையைவிட 15 சட்டமன்ற உறுப்பினர்களை குறைவாகவே இந்தத் தேர்தலில் இவர்களால் பெற முடிந்திருந்தது. இதற்கு சில அரசியல் கூட்டணி முடிவுகளும், ஆளும் கட்சியினரின் சில அதிருப்திகளும் காரணமாக அமைந்தன. 

தெளிவாக குறிப்பிட்டால், 2009ல் நடைபெற்ற 15வது மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற (6,953,591) வாக்குகளைவிட 11,029,577 வாக்குகள் அதிகமாக பெற்று பிரம்மாண்டமான கட்சியாக உச்சத்திற்கு உயர்ந்தது அதிமுக. இதே கட்சி 2004ல் நடைபெற்ற 14வது மக்களவைத் தேர்தலில் 8,547,014 வாக்குகளைப் பெற்றிருந்தும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் தக்க வைக்க முடியாமல் போனது. ஆக, இத்தேர்தலில் அதிமுக எம்பிக்களின் பட்டியல் பூஜியம்தான்.

2004ல் பூஜியமாக இருந்த நிலையை மாற்றி 2009ல் 9 எம்பிக்களை பெறும் அளவுக்கு கட்சியை முன்னேறியிருந்த ஜெயலலிதா, 2014ல் அதிரடியாக 37 எம்பிக்களை பெற்று பலமான கட்சியாக மாற்றி இருந்தார். ஆக, ஜெயலலிதா தனது தனித்துவமான முடிவுகளால், பல அரசியல் யூகங்களால் அவர் தனது கட்சியை ஆட்சிக்கட்டிலுக்கு அழைத்து சென்றார். 

இதில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் ‘மோடி அலை’ வீசிக்கொண்டிருந்ததாக கூறப்பட்ட காலத்தில்தான் ஜெயலலிதா, 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றிருந்தார். முதலில் மோடியின் மீது அன்பு காட்டி வந்த ஜெயலலிதாவை எதிர்க்கட்சிகள் ‘இவர் மோடியை எதிர்த்து பேசாமல் மெளனமாக இருப்பது இவர்களுக்குள் உள்ள மறைமுக கூட்டணியையே காட்டுகிறது’ எனக் கூற, தனது  இறுதிகட்ட பிரச்சாரத்தில், ‘மோடியா? இந்த லேடியா?’ எனக் கூறி அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஜெயலலிதா. இந்த மனமாற்றத்தை எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகள் இறுதியாக தங்களின் அரசியல் வியூகங்களை வகுக்க முடியாமல் தவித்தன.  

கடந்த முறை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டியே தமிழகத்திலுள்ள ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. முன்னதாக இந்தத் தொகுதியில் தேமுதிகவின் அவைத் தலைவராகவிருந்த பன்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க, இடைத்தேர்தலை சந்தித்தது ஆலந்தூர். அதில், ‘முடிந்தால் தனித்து நின்று வென்று காட்டுங்கள்’ என சட்டமன்றத்திற்குள்ளாகவே தேமுதிகவை பார்த்து சவால் விடுத்திருந்தார் ஜெயலலிதா.

அவரது சாவால் தேர்தல் களத்திலும் நிஜமானது. அதிமுக சார்பில் போட்டியிட்ட வி. என். பி. வெங்கட்ராமன் வெற்றிபெற்றார். இந்தத் தேர்தலில் தேமுதிக 20 ஆயிரம் வாக்குகளையே பெற முடிந்தது. அதே போல திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.எஸ்.பாரதியும் தோல்வியை தழுவினார். ஜெயலலிதா கூறியதைபோல தனித்து நின்று வென்றுகாட்டிய தொகுதியாக ஆலந்தூர் அமைந்தது.   

இந்தப் பின்னணிகள் யாவும் ஜெயலலிதா காலத்து அதிமுகவின் வரைப்படம். ஆனால் அவர் மறைந்த பிறகு ஈபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு அமில பரிசோதனையாக அமைந்தது ஆர்.கே நகர் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுக அதிரடியான தோல்வியை சந்தித்ததுடன் பிரதான எதிர்க்கட்சியான திமுக தனது வைப்புத்தொகையையே இழக்க நேரிட்டது.

இந்நிலையில்தான் இந்த மே மாதம் நடைபெற உள்ள 17வது மக்களவைப் பொதுத்தேர்தலில் அதிமுக, தனது மெகா கூட்டணியை ஏறக்குறைய பாதி முடிவு செய்துள்ளது. அதன்படி பாஜகவிற்கு 5 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயலலிதாவின் பகையாளி கட்சியாக இருந்து வந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 சீட்டுகள் ஒதுக்கப்பட்டதுடன் ஒரு மாநிலங்களவை சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விரைவில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை இந்த இரு கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

மேலும் தேமுதிக வருகைக்கான அதிமுக காத்திருக்கிறது. ‘வந்தால் மகிழ்ச்சி’ என்று ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். ஓபிஎஸ், ‘தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை தொடர்கிறது’ என வெளிப்படை தன்மையை பேணி வருகிறார். ஆக, ஜெயலலிதாவின் பகை கட்சிகளான பாமக, தேமுதிகவை அரவணைக்கும் போக்கையே இன்றைய அதிமுக தலைமை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி பார்த்தால் இறுதியாக அதிமுக இந்த மக்களவை தேர்தலில் 23 முதல் 25 தொகுதிகள் வரை களம் இறங்க வாய்ப்பு உள்ளது. அதன்படி கணக்கிட்டால் அந்தக் கட்சி ஏற்கெனவே தன் கைவசம் இருந்த 11 எம்பிக்களை குறைத்து கொண்டுள்ளதாக சொல்லலாம். அப்படியென்றால் ஏறக்குறைய 66 சட்டமன்றத் தொகுதிகளை அதிமுக இழக்க உள்ளது. இந்த முடிவு ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் இன்றைய நிலையை காட்டுவதாகவே உள்ளது. 

இந்தியாவின் மூன்றாவது பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்திருந்த ஒரு கட்சி, தனது வலிமையான தலைவரை இழந்ததன் விளைவாகவே இந்த இழப்பு நடந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் பலரும் கருதுகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com