உலகின் மிகவும் பிரபலமான காஃபி ஹவுஸில் முதன்மையானதாக இருப்பது அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனம். கிட்டத்தட்ட 80 நாடுகளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் தென் இந்தியாவின் பெங்களூருவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு மகிழ்ந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகியிருக்கிறது.
கர்நாடகாவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் zev siegl பெங்களூரு வந்திருக்கிறார். அப்போது பசவனக்குடியில் உள்ள காந்தி பஜாரில் இருக்கும் பிரபல சவுத் இந்தியன் உணவகமான வித்யார்த்தி பவனுக்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவரை உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தரப்பில் அமோகமாக வரவேற்றதோடு, அவருக்கு அந்த ஓட்டலின் மசாலா தோசையையும், ஃபில்டர் காஃபியையும் கொடுத்திருக்கிறார்கள். ஸ்டார்பக்ஸில் காஃபி குடிக்க வேண்டும் என அனைவரும் வேண்டி விரும்பி காத்திருக்கும் வேளையில் அதன் நிறுவனர்களில் ஒருவரே சவுத் இந்தியன் டிபனை சாப்பிட்டிருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் உணவகத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ணா மற்றும் ஊழியர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட ஸேவ், மசாலா தோசை, ஃபில்டர் காஃபியின் சுவை அருமையாக இருந்ததாகவும் பாராட்டியிருக்கிறார். இதுபோக, “நண்பர்களே... உங்களுடைய பாரம்பரிய உணவான தோசை மற்றும் காஃபி சாப்பிட்டது பெருமையாக இருக்கிறது.
இந்த அழகான அற்புதமான அனுபவத்தை என்னோடு சியாட்டிலுக்கு எடுத்துச் செல்கிறேன். நன்றி!” எனக் குறிப்பிட்டு வித்யார்த்தி பவனுக்கு குறிப்பும் எழுதியிருக்கிறார் ஸேவ். ஸேவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும், அவர் எழுதிய கடிதத்தையும் வித்யார்த்தி பவன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.