தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டு, திறக்கப்படுவதற்கு முன்பாகவே பாலம் விரிசல் கண்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாந்தபிள்ளை ரயில்வே கேட்டில் 52 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு வருகிற 29ஆம் தேதி முதலமைச்சரால் திறக்கப்பட இருந்தது. இந்த நிலையில், பாலத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டிருந்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள், பாலத்தில் விரிசல் முற்றிலும் சரி செய்யப்பட்ட பிறகே பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாலத்தை எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அதன் கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் தவறு நடந்ததற்கு யார் காரணம் என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்ட விவகாரத்தில், பொதுப்பணித் துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.