டெங்கு பாதிப்பு பெருகி வரும் நிலையில், விழா கொண்டாட்டங்களில்தான் முதலமைச்சர் பழனிசாமி கவனம் செலுத்துகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரே நாளில் பள்ளி மாணவி உள்ளிட்ட 17 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க மருத்துவமனைகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்றும், உயிரைப் பறிக்கும் காய்ச்சலைக் கூட தடுக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தத்தளித்து நிற்பதாக குறைகூறியுள்ளார். கொசு ஒழிப்பிற்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டு விட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் கூறி வந்தாலும், கொசுவை ஒழிக்க முடியாததற்கு தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதே காரணம் என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், விழா கொண்டாட்டங்களில்தான் முதலமைச்சர் பழனிசாமி கவனம் செலுத்துவதாக ஸ்டாலின் சாடியுள்ளார். எனவே தினமும் மரணங்கள் ஏற்படுவதற்கு காரணமான டெங்கு காய்ச்சலை தடுக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.