ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்பே, அதற்கு அதிமுக அரசு கால்கோள் விழா நடத்தி இருப்பது ஏன்? அரசின் இந்த அறிவிப்பு, ஆரம்பப் பள்ளி தேர்வுகளை எழுதவும் கோச்சிங் சென்டர்கள் தேவை என்ற தாழ்நிலையை உருவாக்கும். ஆரம்பக் கல்வியையும் வணிகமயமாக்கி விடும் பேராபத்தை தோற்றுவிக்கும். ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி அறிவையும் இது எட்டாக் கனியாக்கி விடும்.
கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்து, அதன் மூலம் அவர்களை தோல்வியடையச் செய்து, படிப்பை விட்டு விலகி குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரத்தை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக கடைபிடிக்கின்றன. இது அனைவருக்கும் கல்வி என்ற முற்போக்கு எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
ஏற்கெனவே 10,11,12 என மூன்று வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கும் நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு கடுமையான மனஅழுத்தத்தையும், விரக்தியையும் உருவாக்கும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் மாணவர்களின் கல்விக் கனவை சீரழிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.