இன்னொரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயார் என்பதை காட்டவே கருணாநிதியின் இந்த வைரவிழா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கருணாநிதியின் வைரவிழாவில் பேசிய ஸ்டாலின், விழாவின் நாயகர் கருணாநிதி இங்கே இருந்திருக்க வேண்டும். அவரை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தோம். உடல்நிலை தேறிவரும் நிலையில் வெளியில் அழைத்துச் சென்றால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறியதால் அவரை அழைத்து வர முடியவில்லை. திமுகவை தொடர்ந்து கருணாநிதி வழி நடத்துவார். இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிக்கப்படுவதையே நாங்கள் எதிர்க்கிறோம். நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே இன்று நம்முன் உள்ள சவால். பாஜக ஆட்சிக்கு எதிராக இன்னொரு சுந்தந்திரப்போராட்டத்திற்கு தயார் என்பதை உணர்த்தவே இந்த விழா என அவர் பேசினார். திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழா திமுக சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேகர் ரெட்டி மற்றும் டி.ராஜா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மஜீத் மேமன், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கருணாநிதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.