திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது: ஸ்டாலின்

திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது: ஸ்டாலின்
திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது: ஸ்டாலின்
Published on

தொலைக்காட்சி விவாதத்தில் எழுத்தாளர் வே.மதிமாறனுக்கும், பாஜக நாராயணனுக்கும் நடைபெற்ற காரசாரமான விவாதத்தால் எழுந்த சர்ச்சை குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஸ்டாலின் தனது நண்பர் என்றும், தான் சொன்னதை அவர் கேட்டுக் கொண்டார் என்றும் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்தார். இந்த வீடியோவைப் பார்த்த திராவிட இயக்க ஆதராவாளர்கள், மு.க.ஸ்டாலின் மீது தங்கள் அதிருப்தியை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்தப் பிரச்னை குறித்து தனது விளக்கத்தை தெரிவித்த ஸ்டாலின், நட்புக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும், திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி சம்பந்தமான சர்ச்சையினையடுத்து, நடிகரும் நண்பருமான எஸ்.வி.சேகர் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்னைகளில் தொடர்ந்து கருத்தைச் செலுத்திட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதால், இதுகுறித்து உடனடியாக கவனம் செலுத்த நேரமோ வாய்ப்போ நேர்ந்திடவில்லை. டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தினை அறிந்தபின் பங்கேற்கலாம் என்பதால் அந்த நிகழ்வைக் கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, தனிமனித நட்புக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்டு, சமூக ஊடகங்களில் விமர்சனங்களாகி வருவதை பின்னர் அறிந்தேன். நூறாண்டு கால திராவிட இயக்கம் எந்த சமூகநீதிக் கொள்கையையும், சமநீதியையும், சமத்துவத்தையும் முன்வைத்துப் பாடுபடுகிறேதா அந்தக் கொள்கைகளுக்கு குன்றிமணி அளவிலும் குந்தகம் ஏற்படாத வகையிலும் பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் திமுக தொடர்ந்து செயல்படும் என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம் ஏற்பட வேண்டியதில்லை.

தந்தை பெரியாருக்கு மூதறிஞர் ராஜாஜியுடனும் நட்பு உண்டு, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடனும் நட்பு உண்டு. அதற்காகத் தனது கொள்கைகளை எப்போதும் அவர் விட்டுத் தந்ததில்லை. அதுபோலவே பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் தனிப்பட்ட முறையில் பலருடனும் நட்பு பாராட்டினாலும் கொள்கைகளில் கொண்டிருந்த உறுதியை எதற்காகவும் தளர்த்தியதில்லை. அவர்களின் வழியில் இந்தப் பேரியக்கத்தின் செயல்தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும் யாரையும் எதிர்கொள்வேன். யாரிடமும் எனக்கு தனி மனித விரோதமில்லை; பேதமுமில்லை. அதேநேரத்தில், தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது - சமரசம் செய்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் எந்தத் தருணத்திலும் முடியவே முடியாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com